"பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நில்லுங்கள்" முதலமைச்சர் வலியுறுத்தல்!

பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று காவல்துறை செயல்பட தொடங்கினால் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான மாநாடு நடைபெற்றது. மாலையில் நடந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மாநாட்டில்,  சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயல்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகளில் தடய அறிவியல் துறையின் அறிக்கைகள் மிகவும் அவசியம் என்பதால் அதனை விரைந்து பெற வேண்டும் என்றார். 

மேலும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட முதலமைச்சர், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் என்றார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று காவல்துறை செயல்பட தொடங்கினால் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும் எனவும் வலியுறுத்தினாா். 

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறாமல் சட்டம் – ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், சமூக ஊடகங்களை தீவிரமாக கண்காணிப்பதுடன், அனைத்து மாவட்டங்களிலும் அமைதி நிலவ காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சாதி, மத மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கவனமுடன் செயல்பட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டக் கொண்ட முதலமைச்சர், அரசுக்கு தேவையான ஆலோசனைகளை அதிகாரிகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தெரிவிக்கலாம் என்றார்.  

தொடா்ந்து இன்று நடைபெறவுள்ள 2-வது நாள் மாநாட்டில் மீண்டும் மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறாா். மாநாட்டில் மாவட்ட நிா்வாகம், சட்டம் - ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது. மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்யவும் அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் அதிகாாிகளுக்கு உாிய அறிவுரைகளும் வழங்குகிறாா். 

இதையும் படிக்க: “மத்திய பாஜக அரசை கண்டித்து அக்.8-ல் நாதக. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!