சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விரைவில் நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க விரைவில் நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சேலத்தில் ஜவுளி பூங்காவிற்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 3 நாள் பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்படி, சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா வளாகத்தில், 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, சேலத்தில் 96 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி மாநகர ஈரடுக்கு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து இயக்கத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர், கருப்பூர் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு கணக்கிலடங்கா திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என தெரிவித்தார். 

இதையும் படிக்க : தமிழக பிரதமர் வேட்பாளர் 2 பேரை தமிழ்நாடு இழந்துவிட்டது...இதற்கு திமுக தான் காரணம்...அமித்ஷா அதிரடி!

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலத்தில் புதிதாக கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தவர், சேலத்தில் ஜவுளி பூங்காவிற்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 170 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 ஆயிரத்து 202 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோன்று, 
ஆயிரத்து 367 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 390 முடிவுற்ற திட்ட பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  

நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.