கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவி தற்கொலை - மூவரை கைது செய்யக்கோரி மாணவர்கள், உறவினர்கள் சாலை மறியல்

நாகை அருகே கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரி மாணவி தற்கொலை செய்த கொண்ட சம்பவத்தில் தனியார் கல்லூரியின் தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவி தற்கொலை  - மூவரை கைது செய்யக்கோரி மாணவர்கள், உறவினர்கள் சாலை மறியல்

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகர் பகுதியை சேர்ந்த சுபாஷிணி, பாப்பாக்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்தார். பருவ கட்டணம் செலுத்தாமல் இருந்த மாணவி சுபாஷினியை வகுப்பாசிரியர் வகுப்பின் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதால் மனமுடைந்த மாணவி தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்திய நியைலில்,  தனியார் கல்லூரியின் தாளாளர் ஆனந்த், கல்லூரி முதல்வர் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட 3 பேர் மீதும் நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி பாப்பாக்கோவில் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளும், நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாணவியின் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும்  காவல்துறையின் தடுப்புகளை தகர்த்து உள்ளே நுழைந்த மாணவியின் உறவினர்கள் கல்லூரி பேருந்து கண்ணாடியை கல் வீசி தாக்கினர். இதனையடுத்து அங்கு போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.