அடிதடியை நிறுத்த சாதுர்யமாக ’தேசியகீதம்’ பாடிய மாணவிகள்....! மதிக்காமல் சண்டையிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள்.

அடிதடியை நிறுத்த சாதுர்யமாக  ’தேசியகீதம்’ பாடிய மாணவிகள்....!   மதிக்காமல் சண்டையிட்ட  அரசியல் கட்சி  நிர்வாகிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, மணப்பாறை எம்.எல்.ஏ. அப்துல் சமீது, ஊராட்சி மன்றத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குவதற்கான நிகழ்ச்சியில் யாருக்கு முதலில் சால்வை அணிவித்து மரியாதை செய்வது என்பதில் குளறுபடி ஏற்பட்டது. 

ஒரே நிகழ்ச்சிக்கு அதிமுக.  திமுக. என இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் வந்தபோதிலும்  அதிமுக. ஊராட்சி மன்ற தலைவருக்கு மரியாதை வழங்காமல் புறக்கணித்தாக கூறப்படுகிறது. 

இதனால் ஆவேசமடைந்த அதிமுக. நிர்வாகிகள், திமுக. பிரமுகர்களுடன் வாக்குவாதம் செய்தனர். சில நிமிடங்களிலேயே வாக்குவாதம் கைகலப்பாவதை பார்த்த பள்ளி மாணவிகள் சாதுர்யமாக செயல்பட நினைத்தனர். 

உடனடியாக நான்கு சிறுமிகள் சேர்ந்து பசங்க பட பாணியில் மைக் முன்பு நின்று தேசிய கீதத்தை பாடினர். நாட்டுப் பண் பாடலைக் கேட்டு சண்டையிடாமல் அமைதியாக நின்று விடுவார்கள் என்பது சிறுமிகளின் எண்ணமாக இருந்தது. 

ஆனால் ஆவேசமான கட்சி நிர்வாகிகள் தேசியகீதத்தையே சினிமா பாட்டாக கருதி, மதிக்காமல் சண்டையிட்டனர். ஒரு சால்வைக்காக அடித்துக் கொண்ட கரைவேட்டிக் காரர்களை பார்த்த ஆசிரியர்கள், மாணவர்கள், நிகழ்ச்சிக்கு இவர்களை அழைக்காமலேயே இருந்திருக்கலாம் என மனதுக்குள்ளேயே குமுறிக்கொண்டனர்.

இதையும்  படிக்க   | பொதுமேடைகளில் சண்டை போடும் திமுகவினர்: எச்சரிக்கை விடுத்த மு.க.ஸ்டாலின்!