சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியால் அதிர்ச்சி ...

சாத்தான்குளம் கொலை வழக்கில் தந்தை-மகன் ஆகிய இருவரையும் அடித்து துன்புறுத்தியதாகவும், அவர்கள் உயிரிழந்த பின்னர் ஆவணங்களை மாற்றியதாகவும், நீதிமன்றத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியம் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சிறப்பு சார்பு ஆய்வாளர் சாட்சியால் அதிர்ச்சி ...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். இதனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அதில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாகவும், காவல் நிலையம் அழைத்து சென்று இருவரையும் அடித்து துன்புறுத்தியதாகவும், இருவரும் உயிரிழந்த உடன் ஆவணங்களை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி சாட்சியம் அளித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு காவலரும் சாட்சியம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் 5 காவலர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும்  21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.