கோலாகலமாக நடந்த ஆடிப்பெருக்கு இழா!

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகத்தில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலாகலமாக நடந்த ஆடிப்பெருக்கு இழா!

திருச்சி ஸ்ரீரங்கம்:

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் கரையில் தண்ணீர் கரை புரண்டு ஓடி வருவதால் ஆயிரக்கணக்கான புதுமண தம்பதியினர் பெற்றோர் மற்றும் உறவினருடன் குவிந்தனர். அவர்கள், தங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டும், புனித நீராடியும், வாழை இலையில், பூ, குங்குமம், வெற்றிலை, பழம் உள்ளிட்ட மங்கல பொருட்களைக் கொண்டு வழிபட்டனர். 

கும்பகோணம்:

கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில் குவிந்த ஏராளமானோர், வாழை இலையில் விளக்கேற்றி வெற்றிலை, தேங்காய், பூ வாழைப்பழம் உள்ளிட்ட பல்வகை பழங்களுடன் வழிபாடு செய்தனர். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், சுமங்கலிப் பெண்கள் குடும்ப மேன்மைக்காகவும் வழிபாடு செய்தனர். 

நாகை மாவட்டம்:

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பாலையூர், செம்பியன் மகாதேவி, வலிவலம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கையொட்டி பெண்கள் வழக்கமான உற்சாகத்துடன் வழிபாடு செய்தனர். காவிரி அன்னையை மனதில் நினைத்து காவிரி மண்ணை பிடித்து வைத்து அதற்கு தீபமிட்டு அவர்கள் வழிபாடு செய்தனர். தற்போது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா நாகை மாவட்டத்தில் களைக்கட்டியது.

தஞ்சை மாவட்டம்:

தஞ்சை மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் களை கட்டும் ஆடி 18 பெருவிழா  களை இழந்து காணப்பட்டது. ஆற்றில் இறங்கி வழிபாடு மேற்கொள்வது தடை செய்யப்பட்டதால் அதிகாலை முதல் ஏராளமானோர் ஆற்றின் மேற்புற கரை பகுதிகளிலேயே விழாவை கொண்டாடினர்.