டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்து, குறைந்த விற்பனை உள்ள கடைகள்,  மத வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் ஆட்சேபிக்கக்கூடிய இடங்களில் உள்ள கடைகளை மூடுவது என விதிகள் வகுக்கப்பட்டன.

அதன்படி 500 கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்த நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை என்றும், மூடுவதற்கு வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதாக, பாலமுருகன், அமல்ராஜ், நாகேஸ்வரி உள்ளிட்ட 24 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்களது கட்டடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை தொடர்ந்து நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி. சரவணன், வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: "இனி முதலமைச்சருக்கு தூக்கம் வராது" ஜெயக்குமார் தகவல்!