காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னாள் காவல் ஆணையர் அலுவகம், காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை எழும்பூரில் 1842ஆம் ஆண்டு கட்டப்பட்ட சொகுசு பங்களா, 1856ஆம் ஆண்டில் சென்னை காவல் ஆணையர் அலுவலகமாக மாற்றப்பட்டது. பின்னர், இட பற்றாக்குறை மற்றும் நவீன வசதி போன்ற காரணங்களுக்காக, கடந்த 2017-ல் வேப்பேரியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் ஆணையர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் கட்டடம், 5 கோடி ரூபாய் மதிப்பிட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, காவல்துறை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து தற்போது வரையில், காவலர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள் என காவலர்களின் வரலாற்றை விவரிக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில், காவலர்கள் ரோந்து பணிக்காக பயன்படுத்திய 4 சக்கர வாகனம், உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்திய சொகுசு வாகனம் ஆகியவை, அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், 1918 முதல் தற்போது வரை காவலர்கள் பயன்படுத்தும் அனைத்து ரக துப்பாக்கிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 1982-ல் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சென்னை காவல்துறையினர் கைது செய்த புகைப்படம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடைசியாக சென்னை வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட போது காவல்துறை அதிகாரி விஜயகுமார் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் என்று காலத்துக்கும் மறக்க முடியாத பல புகைப்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும், காவலர்களுக்கு வழங்கப்பட்ட உயரிய பதக்கங்கள், காவல்துறையால் மீட்கப்பட்ட பண்டைய கால வாள், சிலைகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்திய பேண்ட் வாத்தியங்கள் உட்பட பல பொருட்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.