அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் மூடல்..! ஏன் தெரியுமா? தொடக்கக் கல்வி இயக்குநரகம் அளித்த விளக்கம் என்ன?

அரசு தொடக்க பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதால் LKG, UKG வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் தொடக்க பள்ளி ஆசிரியர்களாக மீள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் மூடல்..! ஏன் தெரியுமா? தொடக்கக் கல்வி இயக்குநரகம் அளித்த விளக்கம் என்ன?

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன.

இதனால் அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளின் நிலை குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அங்கன்வாடிகளில் தற்காலிகமாக LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆனால் இடைநிலை ஆசிரியர்களால் மழலையர் வகுப்புகளை நடத்துவதில் சிக்கலும், புரிதலின்மையும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுள்ளது.  

இருப்பினும் தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் கிட்டதட்ட 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை என்பதால் அதனை நிரப்பும் பொருட்டு...LKG, UKG வகுப்புகளை நடத்தி வந்த ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் மீள் பணியமர்த்தப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது.