பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!

இன்று நடைபெறவுள்ள G 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ள அமொிக்க அதிபா் ஜோ பைடன், பிரதமா் மோடியுடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

டெல்லியில் இன்றும், நாளையும் G 20 உச்சி மாநாடு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று டெல்லி வந்தடைந்தார். பின்னர் அவா் பிரதமர் இல்லத்தில் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

ஜோ பைடனுடான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி அவரது ட்விட்டா் பதிவில், இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும் இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு உலக நன்மையை மேம்படுத்துவதில் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகளாவிய பிரச்னைகள் அனைத்தையும் உள்ளடக்கி, பிரதிநித்துவம் வழங்கும் வகையில் நிர்வாகங்கள் அமைய வேண்டும் என்று ஜோ பைடன் வலியுறுத்தினார். மேலும், ஐநாவின் சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 

G 20 உச்சி மாநாட்டை சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஜோ பைடன் பாராட்டியதாக குறிப்பிட்டுள்ள வெள்ளை மாளிகை, சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல் 1 விண்கலங்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பொறியியல் செயல்பாடுகளை விரிவுபடுத்த, அடுத்த 5 ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்யப்படுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் செயல்முறைக்கு வந்துள்ளதற்கு இரு நாட்டு தலைவா்களும் மகிழ்ச்சி தெரிவித்ததாக கூறியுள்ளது.

இதையும் படிக்க:பூச்சி மருந்தில் கலப்படம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!