நாங்குநேரி சம்பவம் எதிரொலி; ஒருமைப்பாடு உறுதி மொழியேற்ற பொதுமக்கள்!

நாங்குநேரி சம்பவம் எதிரொலி; ஒருமைப்பாடு உறுதி மொழியேற்ற பொதுமக்கள்!

நாங்குநேரில் பட்டியல் இன மாணவர் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் நாடும் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தஞ்சையில். வேண்டாம் பாகுபாடு, சாதிப்போம் ஒன்றுபட்டு என ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

நாங்குநேரில் 12ம் வகுப்பு படித்து வரும் சின்னதுரை என்ற பட்டியல் இன மாணவன் வீடு புகுந்து சக ஆதிக்க சாதி மாணவர்கள் கொடுரமாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இச்சம்பவத்தை கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் தஞ்சை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுனர்கள், பெற்றோர்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 அப்போது, "இந்திய அரசியல் அமைப்பின் மீது பற்று கொண்ட இந்திய குடிமகனாகிய நான் எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சாதி மதம் இனம் சார்ந்த வேற்றுமையை கடைப்பிடிக்க மாட்டேன் எனது மகன், மகள் உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்களும் எவர் மீதும் தெரிந்தோ தெரியாமலோ எந்த வகையிலும் வேற்றுமை எண்ணம் கொள்ளாமல் இருப்பார்கள் என உறுதி அளிக்கிறேன்.

 இந்திய அரசியல் அமைப்பின்படி தீண்டாமை என்பது பெரும் குற்றம் என்பதை நான் முழுமையாக அறிவேன் என்பதால் அவ்வாறே எனது மகன், மகளுக்கு எடுத்துக் கூறி யாரிடமும் எந்த வகையிலும் தீண்டாமையை கடைபிடிக்காமல் சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்கி இந்த நாட்டுக்கு சிறந்த குடிமகனாக எனது மகன், மகளை உருவாக்க பொறுப்பான பெற்றோராக எனது கடமையை சரியாக செய்வேன் என உளமாற உறுதியளிக்கிறேன்" என கூறி ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிக்க:'அதிமுக -விற்கு எதிராக மாநில பாஜக' எடப்பாடி பழனிச்சாமி பேட்டி!