தமிழக கோவில்களின் வரவு செலவு கணக்குகள்... ஜூலை 15க்குள் இணையத்தில் வெளியீடு...

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரவு செலவு கணக்குகள் ஜூலை 15ம் தேதிக்குள் இணையத்தில் வெளியிடப்படுகிறது.

தமிழக கோவில்களின் வரவு செலவு கணக்குகள்... ஜூலை 15க்குள் இணையத்தில் வெளியீடு...
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் வரவு செலவு கணக்கு விவரங்கள் பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில்,இணையதளத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பை ஏற்றதும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் கோயில்களின் வரவு -செலவு விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்படும் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். 
 
கடந்த காலங்களில் ஆண்டு வரவு -செலவு விவரங்கள் அந்தந்த கோயில்களின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும். தற்போது கோயில்களின் வரவு -செலவு கணக்குகளும் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதோடு,கோயில்களில் ஆண்டுதோறும் வரக்கூடிய வருமானம், ஏற்படக்கூடிய செலவுகள், மற்றும் இருப்புகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடர்ச்சியாக நடைப்பெற்று வருகிறது.
 
கோயில்களின் சொத்து விவரங்கள், புணரமைப்பு பணிகள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வையில் படும்படி  hrce. tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், சட்ட பிரிவு 86ன்படி, அறங்காவலர்கள் குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் பட்ஜெட் விவரங்களை சமர்ப்பிப்பதோடு, ஜூன் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.
 
மேலும், ஜூலை 15ம் தேதிக்குள் இணையதளம் பொதுமக்களின் பார்வைக்காக கொண்டு வரப்படும் எனவும், முறைகேடுகள் நடைப்பெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.