"இந்தியா முதலிடத்தில் வரும் நாள் தொலைவில் இல்லை" ஆளுநர் பேச்சு!

"இந்தியா முதலிடத்தில் வரும் நாள் தொலைவில் இல்லை" ஆளுநர் பேச்சு!

பொருளாதாரத்தில் அமெரிக்கா ,சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் முதலிடத்தில் வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை,
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட சமூக நலஅலுவலகம், ஆகியன சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் பார்வையிட்டார். மேலும், மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

மக்கள் சேவையில் மகத்தான 9 ஆண்டுகள், திட்டங்களும் சாதனைகளும் என்ற இரு குறிப்பேடுகளையும் வெளியிட்டார். மேலும், சந்திராயன் வெற்றி குறித்த வீடியோவை மாணவியர்கள் பார்வைக்கு ஒளிப்பரப்பு செய்தனர்.

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "பாரத பிரதமரின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது. அதில் மிக முக்கியமாக இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்க வைக்கும் அளவில் சந்திரயான் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளோம். நான் எனது வாழ்நாளில் எத்தனையோ பிரதமர்களை மிக நெருக்கத்திலும் தூரத்தில் இருந்தும் சந்தித்துள்ளேன். ஆனால் அத்தனை பிரதமர்களை விடவும் பிரதமர் மோடி மிகச் சிறந்த ஆளுமை உள்ளவராக இருக்கிறார். 

கடந்த 9 ஆண்டுகளில் நம் நாடு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலத்தில் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிற்கு கிடைப்பதற்கு பெரும் சிரமப்பட்டது. ஆனால் தற்போது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் கொரோனா தடுப்பூசி நமக்கு நாமே தயாரித்து மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தை சிறுதானிய ஆண்டாக அறிவிப்பதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுகிறது என பிரதமர் தெரிவித்துள்ளார். ஸ்வச் பாரத் துவங்கிய போது அனைவரும் ஏளனம் செய்தனர். ஆனால் தற்போது இந்தியாவின் அனைத்து ரயில் நிலையங்களும் மிகவும் தூய்மை உள்ளதாக இருக்கிறது. இதற்கு காரணம் பிரதமர் மட்டுமே" என தெரிவித்தார்.  

மேலும், பேசுகையில் பொருளாதாரத்தில் அமெரிக்கா ,சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் முதலிடத்தில் வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.

இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகம் ,பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் அருண்குமார், கள விளம்பர அலுவலர் பிபின் நாத், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், குமரன் மகளிர் கல்லூரி முதல்வர் வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:இந்தியா கூட்டணி; பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு!