” ஆளுநருக்கு முற்றிவிட்டது; எந்த வைத்தியம் செய்தாலும் சரிவராது” - சீமான்.

” ஆளுநருக்கு முற்றிவிட்டது; எந்த வைத்தியம் செய்தாலும் சரிவராது”  - சீமான்.

தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறும் திமுக அரசை, தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடனை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். உடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கலந்தாய்வு செய்தார். 

அப்போது  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

ஆளுநர் மதிக்கும்படியாக நடந்து கொள்ளவில்லை, மதிக்கும்படியாக ஒரு இடத்தில் கூட நடந்து கொள்ளவில்லை. ஆளுநர் ஒன்றுகூட உருப்படியாக பேசவில்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள சனாதானத்திற்கு உச்ச நட்சத்திரம் வள்ளலார் என கூறியுள்ளார். இது சராசரி மனநிலையில் உள்ள ஒருவர் பேசும் பேச்சா? பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப்பரப்பு இல்லை. இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. 3000 ஆண்டுகளாக தான் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் கோட்பாடு உள்ளது என அம்பேத்கார் கூறுகிறார். சனாதான கோட்பாடுகளுக்கு எதிராக தான் சுத்த சன்மார்க்கத்தை வள்ளலார் உருவாக்கினர். ஆனால் வள்ளலாரை சனாதனத்திற்குள் கொண்டு வந்து பேசுகிறார். எனவே ஆளுநருக்கு ரொம்ப முற்றிவிட்டது. இதனை எந்த வைத்தியம் செய்தாலும் சரி பண்ண முடியாது. பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டை அணியக் கூடாது என்றால் கோபம் வரும். சட்டையை கழட்டினால் நான் கருப்பாக தான் இருப்பேன். எனவே என்னை உள்ளே வரக்கூடாது என கூறுவீர்களா ? ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்களை கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணியாதீர்கள் என கூறுவீர்களா?

என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். 

பின்னர், குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து பேசுகையில்:- 

தேர்தலின் போது குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள். தற்போது தகுதி பார்த்து கொடுக்கப்படும் என கூறுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு தகுதி பார்க்கும் நிலையில் இந்த அரசை ஆளுவதற்கு தகுதி பார்த்தா தேர்ந்தெடுத்தோம்? என பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளபோது 15 ஆயிரம் ரூபாய் எப்படி வழங்க முடியும். ரூபாய் 500, 1000, இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவை யாரும் கேட்கவில்லை. கத்திரிக்காய், தக்காளி விலையை தொடர்ந்து பச்சை மிளகாய் விலையும் ஏறிவிட்டது. தக்காளியை திருடிவிட்டு செல்வார்கள் என இரண்டு செக்யூரிட்டி போடப்பட்டுள்ளது. தக்காளிக்கு ராணுவ பாதுகாப்பு அளிப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. தற்போது கல்யாண விசேஷங்களில் பொண்ணு மாப்பிள்ளைக்கு தக்காளி கூடை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் என கூறினார்.

இதையும் படிக்க   | "கல்வி, விளையாட்டு, சுகாதாரம் - முதல்வரின் முக்கியமான கோட்பாடாக அமைந்துள்ளது", அமைச்சர் பொன்முடி!