நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம்...  அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்...

கன்னியாகுமரியில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பேருந்தில் இருந்து மீன் வியாபாரம் செய்யும் பெண் இறக்கி விடப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அரசு பேருந்தில் பயணம் செய்த நரிக்குறவா் குடும்பத்தினர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட சம்பவம்...  அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்...

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என நரிக்குறவர் குடும்பத்தினர் 3 பேர், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நின்றுள்ளனர். அப்போது திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்தில் ஏறி, ஊருக்கு செல்ல தயாராக இருந்தனர். இதனையடுத்து, பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவி உள்பட 3 பேரையும் பேருந்தில் இருந்து ஓட்டுநர் கீழே இறக்கி விட்டுள்ளார். மேலும் நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் குழந்தை பயந்து கதறி அழுதது. இந்த காட்சிகளை வீடியோவாக சிலர் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விட்ட விவகாரம் தொடர்பாக, திருவட்டார் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அரவிந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.