மது அருந்துவோரின் கூடாரமாக மாறிய பூங்கா- மதுபிரியர்களை விரட்டி பிடித்த போலீசார்....

திருச்சி அருகே பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் கும்பலாக சேந்து மது அருந்தியவர்களை போலீசார், விரட்டி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது அருந்துவோரின் கூடாரமாக மாறிய பூங்கா- மதுபிரியர்களை விரட்டி பிடித்த போலீசார்....

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 17 வது வார்டில் உள்ள கள்ளர் தெரு பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நவீன முறையில் கட்டப்பட்டு இன்று வரை  திறக்கப்படாமல் உள்ளது என  கூறப்படுகிறது,

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தென்னூர் அறிவியல் பூங்கா, சிறுவர் பூங்காக்கள் என பல பூங்காக்கள் திறக்கப்பட்ட நிலையில், இந்த பூங்கா மட்டும் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கிடையில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் பூங்காவை தி்றந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் இதுநாள் வரை பூங்கா தி்றக்கப்படாமலேயே இருந்து வந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர் இந்த பூங்காவை மது அருந்தும் பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். பூங்காவின் அனைத்து பகுதியிலும் காலி பாட்டில்கள் சிதறிக் கிடப்பதே இதற்கு சான்றாக உள்ளது. மேலும் மின்சார விளக்குகள் இருக்கைகள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் அந்த பூங்காவில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்கள் சிலரை விரட்டி பிடித்த போலீசார் அவர்களை கைது விசாரித்தனர். அதில் இருவர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது வேதனையான விசயமாக பார்க்கப்படுகிறது. எனவே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் இந்த பூங்காவை, உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.