பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள்; கைது செய்த காவல்துறை!

பணி நிரந்தரம் கோரி போராடிய செவிலியர்கள்; கைது செய்த காவல்துறை!

சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

எம்.ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 11 புதிய மருத்துவமனைகளில் 2-ம் கட்ட செவிலியர் பணிகளை நிரப்பிடக் கோரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முறையாக பணிக்கான கலந்தாய்வு நடந்திட வேண்டும் என்றும், கொரோனா கால கட்டத்தில் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிவரையறை செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.  

இதற்கிடையில் செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து இன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்த நிலையில்,  பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அனுமதி இல்லாமல் போராட்டம் செய்ய முயன்றதால் போராட்டம் செய்ய முயன்றவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

அப்போது திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று செவிலியர்கள் வலியுறுத்தினர்.

கைது செய்யப்பட்டவர்கள் தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் போராட்டம் நடைபெறாமால் இருக்க டிஎம்எஸ் வளாகத்தை சுற்றி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: "காங்கிரசை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறது திமுக" அண்ணாமலை!!