தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருவதால் பொதுமக்கள் ஏமாற்றம்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு நிலவி வருவதால் பொதுமக்கள் ஏமாற்றம்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கரூரில் தடுப்பூசி செலுத்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாமிற்கு சென்றனர். தடுப்பூசி இல்லாததால் திரும்பி செல்லும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் முறையாக அறிவிக்க வேண்டும் என கூறி சுகாதாரத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவரை கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 423 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாகவும், இன்றைய நிலவரப்படி தடுப்பூசி கையிருப்பில் இல்லை என மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும், யாரும் டோக்கன் வாங்க வர வேண்டாம் என தடுப்பூசி மையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் டோக்கன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்கி கொள்ள வருகின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக முன்பதிவு முறை கடந்த 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் முன்பதிவு எண் செயல்படாததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வந்தனர்.