பணம்னு நினைச்சு பையை திருடிய திருடனுக்கு கிடைத்தது அல்வா..

சேலத்தில் பணப்பை என நினைத்து டாஸ்மாக் ஊழியரிடம் இருந்த சாப்பாடு பையை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம்னு நினைச்சு பையை திருடிய  திருடனுக்கு கிடைத்தது அல்வா..

சேலம்,

சேலம் நிலவாரப்பட்டி பகுதியை சேர்ந்த பச்சமுத்து என்பவர் சந்தைப்பேட்டை பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். 

இவர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு பணியை முடித்து கொண்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது அன்னதானப்பட்டியில் ஒருவர் சாலையில் படுத்திருந்ததை கண்டு பச்சமுத்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த இருவர் உள்பட மூவரும் சேர்ந்து, பச்சமுத்துவை தாக்கி அவர் வைத்திருந்த பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். 

பணப்பை என நினைத்து பறித்துச் சென்றவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அது பணப்பை அல்ல சாப்பாட்டு பை என தெரியவந்தது. அன்றைய தினத்தில் டாஸ்மாக் விற்பனை தொகை 6 லட்சம் ரூபாயை பச்சமுத்துவின் சக விற்பனையாளர்கள் எடுத்துச்சென்றதால் அந்த பணம் தப்பியது.

இதனிடையே காயம் அடைந்த பச்சமுத்து அளித்த புகாரின் பேரில் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையிலான தனிப்படை போலிசார் விசாரணை நடத்தி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பையை பறித்து சென்ற அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், முத்துசாமி மற்றும் உடையாப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.