வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்...! போர்க்கால அடிப்படையில் மீட்க கோரிக்கை..!

மியான்மரில் சிக்கித் தவித்து வரும் மூன்று கும்பகோணம் இளைஞர்கள்

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்...! போர்க்கால அடிப்படையில் மீட்க கோரிக்கை..!

கும்பகோணத்தை சேர்ந்து மூன்று இளைஞர்கள் வெளிநாட்டு வேலை மோகத்தால் தற்போது தாய்லாந்த் அருகில் உள்ள மியான்மரில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்துவதாகவும், அந்த பணிகளை செய்யாவிட்டால் உடலில் மின்சாரத்தை பாய்த்து உயிர் பயத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அங்கு சிக்கியுள்ள இளைஞர்களின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் படித்து விட்டு வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது குடும்ப வறுமையை போக்கி வருகின்றனர். பலருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், சிலருக்கு என்ன வேலைக்கு செல்கிறோம் என தெரியாமல் சென்று விட்டு அங்கு சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த கீழக் கொட்டையூர் ராகுல் (22) அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் பானாதுறை விக்னேஷ் (22) ஆகிய மூவரும் சென்னையில் வேலை தேடி தங்கியுள்ளனர். இணையதளத்தில் வெளியான தகவல் அடிப்படையில் விண்ணப்பித்து, கடந்த மாதம் அவர்கள் தாய்லாந்த் நாட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாய்லாந்த் சென்ற அவர்கள் சம்பந்தபட்ட கணினி வேலை நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த, சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களை தென்கிழக்கு மியான்மரின் கயின் மாகாணத்தின் மியாவடி பகுதிக்கு இரவோடு இரவாக அழைத்து சென்று சட்டத்திற்கு புறம்பாக கணினி மூலம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பணியில் ஈடுபட மறுக்கும் இளைஞர்களை கொடூரமான சித்ரவதை செய்து வருவதாக மியான்மரில் சிக்கித் தவித்து வரும் இளைஞர்களின் வீடியோ ஒன்றைஅனுப்பியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மியான்மரில் சிக்கித் தவித்து வரும் தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.