எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

மக்கள் கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில், ஊரடங்கு தளர்வுகள் எந்நேரமும் வாபஸ் பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.

இதன்காரணமாக அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அரசின் நடவடிக்கைகளுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பால் தான் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க பொதுமக்களிடம் இருந்தே கோரிக்கை வந்ததாக கூறிய முதலமைச்சர், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார். 

போலி மது வகைகள், கள்ளச்சாராய விற்பனையால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே, பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி, மக்களின் நலன் கருதியே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாக முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.