அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன்...எதற்காக?!!

அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன்...எதற்காக?!!

மணி விழாவை முன்னிட்டு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள த லீ கிளப்பில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருமாவளவன் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
 
அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  திருமாவளவன்,

உரிமைக்கான குரல்:

அமைச்சர்கள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளும் போது திருமாவளவன் அமைதியாக இருக்கிறார் என டிடிவி தினகரன் விமர்சனம் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ”கணியாமூர்  விவகாரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் போது தான் நடத்தி இருக்கிறோம். கலைஞர் சொன்னது போல ’உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற அடிப்படையில் உரிமைக்காக குரல் கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தயங்கியதில்லை” என தெரிவித்தார்.

பழங்குடியினர் ஆணையம்:

மேலும், ”பழங்குடியின மக்கள் ஜாதி சான்றிதழ் பெறுவதில் இந்தியா முழுவதும் சிக்கல்கள் இருக்கின்றன. அண்மையில் தீக்குளித்த வேல்முருகன் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.யிடம் பேசினேன்.  இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும், அவர் மனைவி  எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அதுவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார் மேலும் பழங்குடியினர்கள் எளிதாக சான்றிதழ்களை பெற ஆய்வு மேற்கொள்வதற்கு அரசு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.

மேலும் தெரிந்துகொள்க:   வேல்முருகன் மனைவி தற்கொலை முயற்சி... உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு பரபரப்பு...

உரிய பாடம்:

அதைத் தொடர்ந்து “வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டை பாஜக குறி வைத்திருக்கிறது.  அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.  தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் உரிய பாடத்தை கற்பிப்பார்கள்” எனக் கூறினார்.

தீட்சிதர் போராட்டம்:

தீட்சிதர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு ”குழந்தை திருமண முறை  சட்டப்படி குற்றம்.  சிதம்பரம் தொகுதி  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன்.  போராட்டத்தில் இருந்த தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் எனவும் அறிந்தேன்” என தெரிவித்தார்.

அலுவல் மொழி:

”பாராளுமன்ற அலுவல் மொழி குழு அண்மையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் உள்ள கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.  அதன் மூலம் இந்தியை நாடு முழுவதும் திணிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவது தெரியவந்துள்ளது.” என்று கூறினார்.

பதவி விலக வேண்டும்:

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ நாடாளுமன்ற அவையில் வாக்கெடுப்புக்காக வைக்க வேண்டிய கோப்புகள் ஊடகங்களில் வெளியாகி இருப்பது நாடாளுமன்ற மரபுகளை மீறிய செயல். எனவே அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று அலுவல் மொழி குழு தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என தெரிவித்தார்.

கண்டனம்:

மேலும் ”இந்தி திணிப்பிற்கு தற்போது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தேவைப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றும் கூறினார்.

                                                                                                 -நப்பசலையார்

இதையும் படிக்க:   ”பன்னீர் செல்வத்துடன் ஏன் சமாதானம் குறித்து பேச வேண்டும் ?” கேள்வியெழுப்பிய ஜெயக்குமார்!!!