கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 97% மக்கள் ஏழ்மையாகியுள்ளனர்.! -அதிர்ச்சி தகவலை கூறிய சசி தரூர்.! 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 97% மக்கள் ஏழ்மையாகியுள்ளனர்.! -அதிர்ச்சி தகவலை கூறிய சசி தரூர்.! 

நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 97% மக்கள் ஏழ்மையாகி உள்ளதாக புள்ளி விவரம் கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ,அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் மற்றும் மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், "இந்தியாவில் மோடியின் மோசமான அரசாங்கத்தால் ஜூலை மாதத்தில் 8வது முறையாக பெட்ரோல் , டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு கடந்த 2 மாதத்தில் 40 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் மற்றும் சமயல் எரிவாயு உயர்வு காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசிய விலைகள் அனைத்து பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த அரசாங்கம் பொதுமக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக வரியை உயர்த்தி கொண்டு உள்ளது. " எனக் கூறினார்.

மேலும், "வருகின்ற திங்கட்கிழமை துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் மற்றும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி குரல்கொடுக்கும், ரபேல் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று தெரிவித்தவர், "நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 97% மக்கள் ஏழ்மையாகி உள்ளதாக புள்ளி விவரம் கிடைத்துள்ளது.அரசு வரியை உயர்த்தி வருமானம் பெறுவதை விட பொதுமக்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதோடு, "தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கையும் இல்லாத சூழலில் அப்படி மாநிலத்தை பிரிக்க முடியாது" என்றவர் "மேகதாது அணை விவகாரத்தில் இரண்டு மாநிலமும் சுமுகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும், இதில் அரசியல் ஆதாயங்களை கடந்து இரு மாநிலத்தின் மக்கள் நலன் கருதி அரசுகள் முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ஊடகத்தை அடுத்த 6 மாதத்தில் கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த அவர், "நாட்டில் உள்ள அனைவருக்கும் பல்வேறு உரிமைகளை அரசு சட்டம் வழங்கியுள்ளது அதனை யாராலும் பறிக்க முடியாது, இதுபோன்று கருத்துக்களை பேசுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

அதன்பின் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக வழங்கியதால் கடன் சுமை அதிகமானது என்று பாஜக தெரிவித்து உள்ளதற்கு பதில் அளித்த அவர், "கடந்த 7 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை இரண்டு மடங்கு கடன் அதிகமாகி உள்ளது, காங்கிரஸ் பொதுமக்கள் தேவையை கொண்டே பெட்ரோல் டீசல் விலையை குறைத்து விற்பனை செய்தது" என்று தெரிவித்தார்.