2 கட்ட முகாம்களில் பங்கேற்க தவறியவர்கள்...சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்!

2 கட்ட முகாம்களில் பங்கேற்க தவறியவர்கள்...சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளதால், முதல் இரண்டு கட்ட முகாம்களில் பங்கேற்க தவறியவர்கள் இதில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் படி, குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இரண்டு கட்டமாக முகாம்கள் நடைபெற்றது. இதில் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக, 12,50,682  விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதில், 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : மதுரை நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் மு.க.அழகிரி?

சென்னையில் முதல் கட்டமாக 98 வார்டுகளிலும், இரண்டாம் கட்டமாக 102 வார்டுகளிலும் முகாம் நடைபெற்றது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 18 ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்நிலையில், முதல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் சூழ்நிலை காரணமாக பங்கேற்க இயலாத பெண்களுக்காக, வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும், இதில் முதல் இரண்டு கட்ட முகாம்களில் பங்கேற்க இயலாத பெண்கள் மட்டும் பங்கேற்று விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 1428 நியாயவிலைக் கடைகளிலும் முகாம்கள் நடைபெறும் எனவும், சந்தேகங்கள் ஏதும் இருந்தால் 044-25619208 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.