விளம்பரப் பலகையை பொருத்த முயன்றபோது பயங்கரம்...உயர் அழுத்த மின்கம்பியில் உரசி இருவர் பலி!

தமிழ்நாட்டின் இருவேறு இடங்களில் கனமழையால் நிகழ்ந்த மின்சார விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விளம்பரப் பலகையை பொருத்த முயன்றபோது பயங்கரம்...உயர் அழுத்த மின்கம்பியில் உரசி இருவர் பலி!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த மேனகா நகர் பகுதியில் வைரம் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு விரிவாக்க கட்டுமானம் தொடர்பாக மிகப் பெரிய விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பெய்த மழையால் கீழே விழுந்த விளம்பரப் பலகையை மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் தூக்கி எறியப்பட்டனர். இதில் செல்லதுரை மற்றும் சேட்டு என்ற இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதியின்றி விளம்பரப் பலகை வைத்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் கமரூதினை காவல்துறை தேடி வருகிறது. 

இதனிடையே திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே  வயலில் கேழ்வரகு அறுவடை செய்ய சென்ற போது அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார். மகள் காயமடைந்தார். ஆந்திராவை சேர்ந்த ஈஸ்வரி என்பவர் ஆம்பூரை அடுத்த  வண்ணாந்துறை பகுதியில் உள்ள  மகள் தீபா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் மகளின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள  கேழ்வரகை அறுவடை செய்ய சென்ற போது நேற்றைய மழையில் அறுந்து வயலில் கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து விட்டார்.  இதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக தாயை காணாததால் வயலுக்கு வந்த மகள் தீபாவும் மின் கம்பியை மிதித்து காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.