"விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது" திருமா பெருமிதம்!

"விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது" திருமா பெருமிதம்!

விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன் 61 வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு மாலை அணிவித்து, கிரீடம் வைத்து கொண்டாடிய தொண்டர்களுடன் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஆகஸ்ட் 17 ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக விசிக சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எனக்கு 60 வயது நிறைவை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஓராண்டு கால நடவடிக்கையாக சனாதன சக்திகளை தனிமை படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என அறைகூவல் விடுத்தோம். தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் இந்த கருத்து பரப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று அகில இந்திய அளவில் பாஜக தனிமைப்பட்டு நிற்கிறது. எதிர்கட்சிகள் 26 கட்சிகள் ஒன்றிணைத்து ஜனநாயக சக்தியாக சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியாக சேர்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது என்று பெருமைப்படுகிறேன். இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருப்பது மகிழ்ச்சி என்றார்.  

வரும் 31 மற்றும் செப்டம்பர் 1,2 ல் மீண்டும் மும்பையில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் கூடி கலந்தாய்வு நடக்க உள்ளது. எங்கள் முயற்சி வெற்றிகரமாக கை கூடி உள்ளது. வரும் தேர்தலில் பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் பெரும்பான்மை இந்து மக்களாலேயே பாஜக ஆட்சி தூக்கி எறியப்பட்டு நாடும் மக்களும் அரசமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். இந்த கருத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் என் மணி விழா நிறைவு மாநாடு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சிராப்பள்ளியில்  "வெல்லும் ஜனநாயகம்" என்ற பெயரில் மாபெரும் மாநாட்டை நடத்த உள்ளோம் என கூறினார். 

இம்மாநாட்டில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் தலைமையில், தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் தேசிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார். இந்த பிறந்தநாளை ஜனநாயக சக்திகளை ஐக்கியப் படுத்தும் உறுதிமொழி ஏற்கும் நாளாக கருதுகிறோம். அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் சனாதன சக்திகளை விரட்டி அடிக்க உறுதி ஏற்க வேண்டும் என்றும் அணி திரள வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:திருப்பதி; மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது!