ஆதி திராவிடர்களுக்கு இடம் வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு...

திருத்தணி அருகே ஆதி திராவிடர்களுக்கு இடம் வழங்கக் கூடாது என்று, சாலையில் சமைத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதி திராவிடர்களுக்கு இடம் வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ராஜா நகரம் மோட்டூர் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்  சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட தனியார் இடமானது, ஆதி திராவிடர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ராஜா நகரம் மோட்டூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பந்தல் அமைத்து 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் சாலையிலேயே சமைத்து சாப்பிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படவே, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 4 மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும், கிராம மக்களின் எதிர்ப்பை தெரியப்படுத்தி, 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.