லாரி மோதி இரண்டு துணை BDO-க்கள் உயிரிழப்பு..!

லாரி மோதி இரண்டு   துணை   BDO-க்கள் உயிரிழப்பு..!

கிருஷ்ணகிரியில் இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை ஆனந்த் நகர் பகுதியில் சேர்ந்தவர் முகிலன்(44) மற்றும் கந்திலி அருகே கஜல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(45)(பெண்) ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று முகிலன் மற்றும் பாரதி ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்காக முகிலனின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்ப்போது அவர்கள் கிருஷ்ணகிரி - சேலம் - பெங்களூர் ஆகிய மூன்று சாலைகளை இணைக்கக்கூடிய ஆவின் மேம்பாலம் அருகே சென்றபோது திடீரென சாலை ஓரத்தில் இருந்து மாடு ஒன்று சாலை நடுவே வந்துள்ளது.

இதனை கண்ட முகிலன் இருசக்கர வாகனத்தை மாட்டின் மீது மோதாமல் தடுக்கும் வகையில் வலது பக்கத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது இதில் இருவரும் கீழே விழுந்த நிலையில் இருவர் மீதும் லாரி மேலே ஏறி இறங்கியது.

 இந்த விபத்தில் முகிலன் மற்றும் பாரதி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிருஷ்ணகிரி போலீசார் இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலக ரீதியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகள் அவ்வப்போது சாலைகள் குறுக்கே வருவதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதனை தடுத்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க     | தக்காளி விலையைக் குறைக்க பரிசீலனை - அமைச்சர் பெரியகருப்பன்!