தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்ற வேலூா் பயணி கைது

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்ற வேலூா் பயணியை  சென்னை விமான நிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல முயன்ற வேலூா் பயணி கைது

சென்னை பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து சாா்ஜா செல்லும் ஏா் அரேபியா விமானம் நேற்று காலை புறப்பட தயாரானது.அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து விமானத்திற்கு அனுப்பி கொண்டிருந்தனா்.

அப்போது அந்த விமானத்தில் வேலூரை சோ்ந்த சமியுல்லா (28) என்பவா் பயணிக்க வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் அவா் 2019 ஆம் ஆண்டில் சாா்ஜாவுக்கு வேலைக்கு செல்வதாக விசா வாங்கிவிட்டு, சாா்ஜா வழியாக ஏமன் நாட்டிற்கு சென்று 8 மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.

இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட நாடுகள் ஏமன், லிபியா.  கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு இந்த தடையை விதித்துள்ளது. தடையை மீறி இந்த நாடுகளுக்கு செல்பவா்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து பயணி சமீயுல்லாவை குடியுறிமை அதிகாரிகள் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் அலுவலக பணியாக சாா்ஜாவிலிருந்து ஏமன் நாட்டிற்கு சென்றதாக கூறினாா். ஆனால் அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை மேலும் அவர் தற்போதும் சாா்ஜா சென்று ஏமன் செல்லவிருப்பதையும் கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து சமியுல்லாவின் பயணத்தை குடியுறிமை அதிகாரிகள் ரத்து செய்தனா். அதோடு அவரை தனி அறையில் வைத்து நேற்று மாலை வரை தீவிர விசாரணை நடத்தினா். அதன்பின்பு அவரை கைது செய்த குடியுறிமை அதிகாரிகள், மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனா்.