தனி நபருக்காக கண்மாயை திறந்த அதிகாரிகள்... கிராம மக்கள் சாலை மறியல்...

சிவகங்கை அருகே தனி நபருக்காக கண்மாயை திறந்த அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனி நபருக்காக கண்மாயை திறந்த அதிகாரிகள்... கிராம மக்கள் சாலை மறியல்...

சிவகங்கையை அடுத்துள்ளது பில்லூர் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சூழ்நிலையில் இவர்களது பிரதான தொழில் விவசாயம் மட்டுமே.

கடந்த சில ஆண்டுகளாகவே போதுமான அளவு மழை இல்லாத நிலையில் இரண்டு ஆண்டுகளாக மட்டுமே பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள பெரிய கண்மாய் இந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஓரளவு நிரம்பி காணப்படும் நிலையில், தனி நபர் ஒருவரின் விவசாய நிலத்தில் சிறிது தண்ணீர் தேங்கியதாக கூறி அரசு அதிகாரிகள் இந்த கண்மாயில் மணலை வைத்து அடைக்கப்பட்டிருந்த மடையை இயந்திரம் மூலம் திறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மடையை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து கிராமத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் ஆகியோர் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.