கனிமவள அலுவலகத்தில் தனி நபர்கள், அரசு முத்திரைகளால் சீல் வைக்கும் வைரல் வீடியோ...

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கனிமவள அலுவலகத்தில் தனி நபர்கள் அரசு முத்திரைகளை அரசு அலுவலர்கள் துணையுடன் அவர்களாகவே அச்சிட்டு கொள்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கனிமவள அலுவலகத்தில் தனி நபர்கள், அரசு முத்திரைகளால் சீல் வைக்கும் வைரல் வீடியோ...

கனிம வளக் கொள்ளையில் தனியார் சுரங்கம், செங்கல் சூளை, கல்குவாரி மற்றும் க்கிரஷர் உரிமையாளர்களுக்கு, தேனி ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கனிமவள உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அந்த யாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து கனிம வளக் கொள்ளையில் சுயலாபத்திற்காக கடமையை மறந்து விரோத செயல்களுக்காக துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது.

இதையடுத்து கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் ஒரு குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குனரை சந்திக்கச் சென்றனர்.

அப்போது பணியாளர்கள் அல்லாதவர்கள் எனக்கூறப்படும்  தனி நபர்கள் 3 பேர் கல்குவாரியில் அனுமதி சீட்டு ரசீது புத்தகத்தில் அரசு முத்திரைகளை வைத்துக் கொண்டிருப்பதை கண்டு அவற்றை படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் கே.வி. முரளீதரனை தொடர்புகொண்டு கேட்டபோது, 'அரச முத்திரையை பயன்படுத்தியவர்கள் தனிநபர்கள் அல்லது அலுவலக பணியாளர்கள் என்பதை உடனே விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.