மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்தே தீருவோம் - துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்தே தீருவோம் - துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்றும், அணை கட்டுவதில் கர்நாடக அரசு 100 சதவீதம் உறுதியாக உள்ளதாகவும் கூறி, புகைச்சலைக் கிளப்பினார். 

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணையை கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று, கர்நாடக உள்துறை அமைச்சர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் நீரை இடைமறித்து, மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது எனக் கூறியுள்ள அவர், இதனை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல என்றும், அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்த தல்ல என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நீரை அந்த மாநிலம் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. அது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணையை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார்.