வலுவிழக்கும் அசானி புயல்... 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வலுவிழக்கும் அசானி புயல்... 7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவிழந்துள்ள அசானி புயல், வட ஆந்திரா கடலோர பகுதி வழியாக நகர்ந்து, மத்திய - மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கூடும் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி, வட தமிழகம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை முதல் 15ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
மத்திய மேற்கு  வங்க கடல் பகுதிகள், ஆந்திரா கடற்கரை பகுதிகள், ஒடிசா கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகிற 13ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.