களையிழந்து காணப்படும் ஆட்டுச் சந்தை விற்பனை...கவலையில் வியாபாரிகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களில் ஆட்டுச் சந்தைகளில் ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்டதால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ஆட்டுச் சந்தை தென் மாவட்டங்களில் பெயர் பெற்ற ஆட்டு சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்களில் ஆடுகள் விற்பனை களைக்கட்டும். நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆறுமுகநேரி ஆட்டு சந்தை இன்று விற்பனை நடைபெற்றது. இதில் வெள்ளாடு, செம்மறி என ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் 50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி உள்ளதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

இதேபோல் திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தாலும் விற்பனை குறைவாக காணப்பட்டுகிறது. ஆடுகளை வாங்க சமயபுரம், மண்ணச்சநல்லூர், கல்லக்குடி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளாடுகள், செம்பறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும் போதிய அளவிற்கு விற்பனை இல்லாததால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். 

கோவில்பட்டி அருகே உள்ள பிரசித்த பெற்ற எட்டையபுரம் ஆட்டு சந்தையில் விவசாயிகளிடமிருந்து ஆடு வரத்து குறைவாக காணப்பட்டதால் விற்பனை மந்தமாக உள்ளது. மதுரை, மானாமதுரை, திருமங்கலம், அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், சாயல்குடி, எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகளும், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகளும் வருகை தந்தனர். ஒரு வாரமாக மழை பொழிவு இருந்ததால் விவசாயிகளால் ஆடுகளை கொண்டுவர முடியாத சூழலும் உருவாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.