இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்...?

இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்...?

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இதுவரை 23,03,310 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்கியது. அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரை திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் விவரங்கள் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பணிக்கு செல்வோரின் வசதிக்காக, கடந்த நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் அதாவது 12,13 மற்றும் 26, 27 ஆகிய சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டில் வசிக்கும் தமிழர் பெயர் சேர்க்க 6ஏ, ஆதார் எண் இணைக்க 6 பி, பெயர் நீக்கத்துக்கு 7, தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் 8 ஆகியவை பெறப்பட்டன. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இதுவரை பெயர் சேர்க்க மட்டும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 018 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதுதவிர பெயரை நீக்க 7,90,555 விண்ணப்பங்கள் என மொத்தம் 23,03,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற ஜனவரி 3 ஆம் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதையும் படிக்க : மகாகவி பாரதியின் உறவினரை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...!