”ஆளுநர் வேறு ஒரு உலகத்தில் உள்ளார்; அதிமுக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?” உதயநிதி ஸ்டாலின்!

”ஆளுநர் வேறு ஒரு உலகத்தில் உள்ளார்; அதிமுக எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?” உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வால் இதுவரை மாணவர்களை மட்டுமே பறிகொடுத்து வந்த நிலையில், தற்போது அவர்தம் குடும்பத்தினரையும் இழந்து வருவதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.


சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வினை 3ம் முறையாக எதிர்கொள்ளவிருந்த ஜெகதீஷன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், துக்கம் தாளாமல் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் செல்வசேகரின் உடலுக்கு நேரில் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க : இருவரின் உயிரிழப்பால்; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர்!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வால் மாணவர்களை மட்டுமே பறிகொடுத்து வந்தோம் - தற்போது அவர்தம் குடும்பத்தையும் பறிகொடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த சம்பந்தமும் கிடையாது எனவும், நீட் தேர்வு தடைக்கான கோப்பு குடியரசுத்தலைவரிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி வேறு ஒரு உலகத்தில் உலவி வருவதாகவும் அமைச்சர் உதயநிதி கடுமையாக விமர்சித்தார்.

நீட் தேர்வு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததா என கேள்வியெழுப்பியதோடு, கடந்த நான்கைந்து ஆண்டுகளில் 20-க்கும்  மேற்பட்ட மாணவர்களை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். நீட் தேர்வுக்கு சட்டப் போராட்டமே தீர்வு எனக் குறிப்பிட்ட உதயநிதி, அதுவும் இல்லையெனில் போராட்டத்தால் முடிவுக்குக் கொண்டு வருவோம் எனவும் கூறினார். இதனிடையே  நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு, ஜெகதீஷனின் நண்பர் ஃபயாசுதீன், உதயநிதியிடம் கதறியழுது கோரிக்கை விடுத்தார்.