கோடை தாகத்தை தீர்த்த கனமழை...மகிழ்ச்சியில் மக்கள்...!

கோடை தாகத்தை தீர்த்த கனமழை...மகிழ்ச்சியில் மக்கள்...!

சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிக்கு உள்ளாயினர். 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனினும், அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த பிறகும் வெயிலின் தாக்கம் மட்டும் சற்றும் குறையாத நிலையில், சென்னையில், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் திருவள்ளூரிலும் பரவலாக மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மூன்று மணிக்கு மேல் திருவள்ளூர், காக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. 

இதையும் படிக்க : ”முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி” - கரு.நாகராஜன் காட்டம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. 

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஒருநாள் கோடை மழைக்கே அதிக அளவிலான தண்ணீர் தேங்கியதால் அனைத்து தரப்பு மக்களும் இன்னலுக்கு ஆளாயினர்.,

மதுரை மாநகரில் கோடை வெயிலுக்கு இடையே திடீரென பெய்த மிதமான சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பழங்காநத்தம், ஜெய்ஹிந்புரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், விழுப்புரம், விக்கிரவாண்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாயினர்.