காரை வேகமாக ஓட்டிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்த வாலிபர் கைது... கண்டனம் தெரிவித்து ஊர்மக்கள் சாலை மறியல்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் பிரமுகரிடம் தகராறு காரணமாக வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காரை வேகமாக ஓட்டிய பஞ்சாயத்து தலைவரை கண்டித்த வாலிபர் கைது... கண்டனம் தெரிவித்து ஊர்மக்கள் சாலை மறியல்...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம்  திரியாலம் பஞ்சாயத்து டீகார வட்டம் பகுதியில் உள்ள விஜயன் என்பவருடைய மகன் மணியை(23) நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் காந்தியை திட்டியதாக கூறி காவல் துறை அழைத்துச் சென்றதால் ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி  சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காந்தி  ஒட்டப்பட்டி பஞ்சாயத்து தலைவர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றிருந்த நிலையில்  திருப்பத்தூர் அருகே உள்ள முத்தூர் கூட் ரோடு மேம்பாலம் வழியாக மணியும் அவருடைய சகாக்களும் போய்க் கொண்டிருந்த பொழுது வேட்பாளர் காந்தி நான்கு சக்கர வாகனத்தில் விரைவாக முந்தியுள்ளார்.

இதனால் பதட்டமடைந்த மணி மற்றும் அவருடைய நண்பர்கள் தங்களைக் வேகமாக கடந்து சென்ற வாகனத்தையும் அதில் உள்ளவர்களையும் திட்டியதாக தெரிகிறது. இதை கவனித்த வேட்பாளர் காந்தி தன்னுடைய பதவி செல்வாக்கை பயன்படுத்தி தன்னை திட்டிய வாலிபர்களை ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியை வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வைத்துள்ளார்.

இதனை அறிந்த மணி வசிக்கும்  ஊர் பொதுமக்கள் மற்றும் மணியின் நண்பர்கள் அரசியல்வாதி காந்தி காவல்துறையை ஏவிவிட்டு  மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதையம் அரசியல்வாதிக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரியையும்  கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு அரசு போக்குவரத்து வாகனங்களை சிறைபிடித்தனர். 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை பொதுமக்களிடம் சமரசம் பேசியதின் அடிப்படையில் கலைந்து சென்றனர்.