தமிழ்நாடு அரசின் கடந்த 5 ஆண்டு சிஏஜி அறிக்கை நேற்று சட்டசபையில் வெளியிடப்பட்டது. முந்தைய அரசு சிஏஜி அறிக்கையை அவையில் தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில் நேற்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை மூலம் பல்வேறு துறைகளில் முந்தைய அரசு ஏற்படுத்திய இழப்பு குறித்த விவரங்கள் வெளியானது. முக்கியமாக மின்சார துறையில் முந்தைய அதி்முக அரசின் முறைகேட்டால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு 424 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கொடுமையான விஷயம் என்னன்னா? ரூபாய் 3.30 க்கு கொள்முதல் செய்ய வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய்க்கு வாங்கி முறைகேடு செய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடநூல் தயாரிப்பில் காகிதங்களை கையாளும் கட்டணம் என்று கூறி அரசாணையை விட 5% அதிக கட்டணம் பாடநூல் கழகம் மூலமாக பள்ளிக்கல்வித்துறையுடன் வாங்கப்பட்டுள்ளது. 2016,2017, 2018 ஆகிய 3 ஆண்டுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கல்வித்துறைக்கு 21.85 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பின் சிஏஜி தணிக்கையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் 2019ல் இருந்து இந்த கூடுதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இழப்பு திருப்பி கொடுக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் 2015க்கு முன் அச்சிடப்பட்டு இருந்த புத்தகங்களில் இருந்த "கருணாநிதி" என்ற ஒரு வார்த்தையை நீக்கவும் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது புத்தகங்களின் முன்னுரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த புத்தகங்கள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. புதிதாக இதற்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
இந்த ஒரு பெயர் இருக்க கூடாது என்பதற்காகவே 6.40 லட்சம் புத்தகங்களை மீண்டும் அச்சிட்டுள்ளனர். இதற்காக மட்டுமே 23.27 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெயரை நீக்குவதற்கு இவ்வளவு கோடி செலவு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்ததால், ஏற்கனவே வாங்கப்பட்ட பர்னிச்சர்கள், ஏசி உள்ளிட்ட உபகரணங்கள் வீணாகி சுமார் 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல கடந்த ஆட்சியின் பொது எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கிட்டத்தட்ட 55 கோடி ரூபாய் வரை பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே இழப்புகள் ஏற்பட்டுள்ளன.