தமிழ் கட்டாய பாடம்; "வலிமையான சட்ட வல்லுனரை அமர்த்திடுக", அன்புமணி ராமதாஸ்!

தமிழ் கட்டாய பாடம்; "வலிமையான சட்ட வல்லுனரை அமர்த்திடுக", அன்புமணி ராமதாஸ்!

தமிழ் கட்டாய பாடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிட வலிமையான சட்ட வல்லுனரை அமர்த்திட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி, சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் எந்த நேரமும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதை வலிமையாக எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக  வேண்டும், என தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி, 2006-ஆம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு, 2007-ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு என படிப்படியாக தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு 2015-16ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக படித்த 8 பிரிவினர் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஓராண்டில் கூட பத்தாம் வகுப்பில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கவில்லை. இதற்கு அரசு தான் காரணம், எனவும் சாடியுல்லார்.

மேலும், தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் அச்சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. தமிழக அரசின் சார்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படாதது தான் தமிழ்மொழி வீழ்த்தப்பட்டதற்கு காரணமாகும், எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் நீதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில் வாதிடக் கூடிய திறமையான சட்ட வல்லுனரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை என்பதை உச்சநீதிமன்றத்திற்கு உணர்த்த வேண்டும். இச்சட்டம்  இயற்றப்பட்ட போதே, அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த 2008-ஆம் ஆண்டில் விசாரித்த  உச்சநீதிமன்றம் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதையும் கடந்து ‘‘உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ என்றும் உச்சநீதிமன்றம் அப்போது கருத்து தெரிவித்தது. அதை மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு நினைவூட்டி, தமிழுக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற வேண்டும், எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடம் என்பது பல பத்தாண்டுகளுக்கு முன்பே சாத்தியமாகியிருக்க வேண்டும். ஆனால், அந்த வாய்ப்புகளையெல்லாம் இழந்து விட்ட தமிழகம்,  இப்போது கிடைத்துள்ள கடைசி வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும், எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: அரசுப்பள்ளியில் போதிய இடவசதி இல்லை... சாலையின் இருபுறமும் அமர்ந்து கற்கும் மாணவர்கள்!!