பதிலளிக்காத ஆளுநருக்கு, பதிலளிக்க சொல்லி உத்தரவு!

பதிலளிக்காத ஆளுநருக்கு, பதிலளிக்க சொல்லி உத்தரவு!

சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆளுநரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முறையான பதிலை அளிக்காததால், உரிய பதில் அளிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்," தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசும்போது, சனாதன தர்மம் என்பது சிறந்த தர்மமாகும். பொதுமக்கள் அனைவரும் இந்த தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறி வருகிறார்.

நான் சனாதான தர்மம் குறித்து தேடிய போது, எந்த விவரமும் கிடைக்கவில்லை. இதனால், சனாதான தர்மத்தின் கொள்கை என்ன? இந்த தர்மம் குறித்து எழுத்துப்பூர்வகமாக எழுதப்பட்டுள்ளதா? இந்த தர்மம் பிற நாடுகளில் பின்பற்றப்படுகிறதா? என்பது உள்பட 18 கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி மனு கொடுத்தேன்.

இந்த மனுவை ஆளுனர் அலுவலக பொது அதிகாரி 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ந்தேதி பெற்றுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, விண்ணப்பம் பெற்று 30 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும். ஆனால், 20 நாட்கள் காலதாமதாக பதில் அளித்தாலும், இதில் பல தவறுகள் இருந்தன.

இதனால், மேல்முறையீட்டு அதிகாரியான ஆளுனர் சார்பு செயலாளரிடம் மேல்முறையீடு செய்தும், இதுவரை பரிசீலிக்கவில்லை" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து, மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை 8 வாரத்துக்குள் பரிசீலித்து, தகுந்த பதில் அளிக்கும்படி ஆளுனர் சார்பு செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


இதையும் படிக்க: பள்ளி மாணவர்கள் மீது சரிந்து விழுந்த ஷாமியான பந்தல்!