"வேலூரில் எது நடந்தாலும் அது வெற்றி பெறும்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

"வேலூரில் எது நடந்தாலும் அது வெற்றி பெறும்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூரில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில், கலந்துகொண்ட  அமைச்சர் துரைமுருகன், இந்திய விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்டு, முதல் கொடியை ஏற்றியதும் இதே வேலூர் தான், பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததும் வேலூரில் தான், என பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

திராவிட நட்புக் கழகம் ஒருங்கிணைத்து நடத்திய மத நல்லிணக்க மாநாடு, வேலூர் கோட்டை பூங்க அருகே நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திராவிட நட்புக் கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிங்கராயர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் சத்யராஜ், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்டோரும், கருத்துரையாளர்களாக அனைத்து மதத்தை சார்ந்த மத குருமார்களும் கலந்துகொண்டனர். 

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மத நல்லிணக்க மாநாடு நடைபெறுகிறது. ஒரே மேடையில் அனைத்து மதத்தினரையும் அமைத்ததை பாராட்டுகிறோம். சங்பரிவார அமைப்புகள் நமது தமிழ்நாடு முதல்வருக்கே சவால் விடுகிறார்கள். ஆளுநர் என்பதை மறந்து ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக செயல்படுகிறார் தமிழக ஆளுநர். திமுக என்றால் சமூக நீதி கட்சி, பெரியார் அரசியல். அதனால் தான் வீழ்த்த திட்டம் தீட்டி வருகிறார்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என கூறி பேசினால் தமிழன் ஏமாந்துவிடுவான் என நினைக்கிறார்கள். ராமன் உயிரோடு இருந்திருந்தால் என் பெயரை ஏன் அரசியலுக்காக பயன்படுத்துகிறாய் என கோபப்பட்டு இருப்பான். அவர் இல்லை என்றால் ராமனின் பக்கதர்கள் கோபப்பட வேண்டாமா?
கட்டாயப்படுத்தி யாரையும் காதலிக்க வைக்கவும் முடியாது, மதம் மாற்றவும் முடியாது. ஆனால் இவர்கள் இவற்றை அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததாக சில அறிவு ஜீவிகள் பேசுவார்கள். அவர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். திமுக பாஜகவோடு கூட்டு வைத்த போது கருணாநிதி 3 விதிகளோடு தான் கூட்டணி வைத்தார். பொது சிவில் சட்டம், பாபர் மசூதி, கஷ்மீர் பிரச்சனைகளில் கையெழுத்து இடக்கூடாது என்ற நிபந்தனையோடு கூட்டணி வைத்தார். ஆனால் இன்றைக்கு இதில் 2- ஐ நிறைவேற்றிவிட்டார்கள். 3 வது பொது சிவில் சட்டத்தை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கிளைமாக்ஸ் ஆக உலக சாதனையாக ராமர் கோவிலை திறக்க உள்ளார்கள். அம்பேத்கர் கூறிய பொது சிவில் சட்டத்தின் நோக்கம் வேறு. இப்போது இவர்கள் கூறும் பொது சிவில் சட்டம் வேறு, எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா சாவா என்கிற, மிகவும் ஆபத்தான தேர்தல் எனவும், அதில் இவர்கள் வென்று விட்டால் அதிபர் ஆட்சியை கொண்டு வந்துவிடுவார்கள் எனவும், தேர்தலே இல்லாத சூழலை உருவாக்கி விடுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இசுலாமியர்களும், கிருஸ்தவர்களும் 100% வாக்களிக்க வர வேண்டும், குறிப்பாக பெண்கள், என தோழமையோடு வேண்டுகோள் விடுதுள்ளார். திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து பேசுகையில், "வேலூரில் எது நடந்தாலும் அது வெற்றி பெறும். இந்திய விடுதலைப் போராட்டங்களுக்கு வித்திட்டு, முதல் கொடியை ஏற்றியதும் இதே வேலூர் தான்,
பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததும் வேலூரில் தான், திராவிடர் கழகம் பிறந்ததும் வேலூரில் தான், ஏழு எம்எல்ஏக்கள் கிடைக்க வழி செய்ததும் வேலூர் தான்", என புகழ்ந்துள்ளார்.

அப்போது, நேருவின் சுயசரிதை புத்தகத்தை மேடையில் படித்துக் காட்டிய துரைமுருகன், அதில் திராவிடம் பற்றி மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டுள்ளார் எனவும், கோசாம்பி எழுதிய பண்டைய இந்தியா என்ற புத்தகத்தில், நேருவின் கருத்துக்கு எதிர் கருத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் திராவிடர் என்ற வார்த்தையை புத்தகத்தில் குறிப்பிடவில்லை, என கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் வேறு எந்த மதமும் இருக்கக் கூடாது. இந்து மாதம் மட்டும் தான் இருக்கணும், அதிலும் சனாதானம் மட்டும் தான் இருக்க வேண்டும், அதிலும் பார்ப்பனர்கள் கொள்கையோடும், ஜாதியோடும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது தான் பிஜேபி யின் லட்சியம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 11:00 மணி வரைக்கும் ஓட்டு போடுவது டல்லாக இருந்தது. காஷ்மீர் பிரச்சனை வெளிவந்த பிறகு மடமடவென ஓட்டை போட்டு விட்டோம். ஒன்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எல்லோரும் அடிபணிந்து விடுவார்கள். ஆனால் இந்த பெரியார் மண் என்றைக்கும் அடிபணியாது. சிறுபான்மையினர்கள், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள், வேறு யாராக இருந்தாலும் சரி என்றைக்கும் உங்கள் உடைமையை, உயிரை காப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம், என பேசியுள்ளார்.

இதையும் படிக்க || "ஆளுநர் ஒரு ஊடு பயிர் மாதிரி தான், முக்கியமான பயிர் கிடையாது" கே எஸ் அழகிரி விமர்சனம்!