அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் படங்களை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கல்லூரி நிர்வாகத்தின் தன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகிய ஒரு பட்டியல் சமூக மாணவர் தொடர்ந்த மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் படங்களை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேனி அரசு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவர் சசிகுமார். அம்பேத்கரின் உருவப்படத்தை முதல்வர் அறையில் வைக்கக் கோரி மாணவர் சசிகுமார், கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகவும், கல்லூரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கெதிராக அந்த மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கல்லூரியில் அம்பேத்கரின் புகைப்படத்தை நிறுவ வேண்டும் மற்றும் சட்டப்  பாடத்தை தமிழில் கற்பிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மனுதாரர் தனது மனுவில் மூன்று பேராசிரியர்களை நேரில் ஆஜராக கோரியிருந்தார். ஆனால் மனுதாரருக்கு நீதிமன்றம், எந்தவொரு நிவாரணம் வழங்குவதில் மூவரிடமிருந்தும் எதிர் பிரமாணப் பத்திரங்கள் தேவைப்படும் என்பதால் நேரில் ஆஜராகக் கோரி பெயரிடப்பட்ட பிரதிவாதிகளை கைவிடுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

மனுதாரர் கல்லூரி முதல்வரிடம் கடிதம் வாயிலாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளதா என அரசு வழக்குரைஞர் தெரிவிக்கும்படி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மற்றொரு வழக்கில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ள ரூ. 10,000 தொகையை மனுதாரருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல வாரிய அறக்கட்டளையின் மதுரைக் கிளையின் கணக்கில் ரூ.10,000 செலுத்துமாறு ஒரு வழக்கில் நான் ஆணையிட்டேன். அந்தத் தொகையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் நலனுக்காகச் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். அறக்கட்டளை மனுதாரருக்கு அந்த ரூ. 10,000 தொகையை செலுத்த வேண்டும். இது அவரது சட்ட நூலகத்திற்கு அடித்தளமாக இருக்கும். சில நிலையான சட்ட நூல்களை வாங்க உதவும்  என நீதிபதி கூறினார்.