100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு, கேடயம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!!

ஈரோடு மாவட்டம் இந்த கல்வியாண்டில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதற்கு ஆசிரியர்கள் தங்கள் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கியுள்ளார்.

அப்பொழுது அவர் பேசுகையில், "ஈரோடு மாவட்டத்தில் 2022-2023 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கிய 89 பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களை பாரட்டும் வகையில் கேடயங்களும், அதே போன்று, 2023-ஆம் ஆண்டிற்கான "டாக்டர் ராதாகிருஷ்ணன்" நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களையும் கௌரவிக்கும் வகையில் 11 ஆசிரியர்களை பாராட்டு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கல்வியாண்டில் 10,11,12 ஆகிய வகுப்புகளில் ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடிப்பதற்கு ஆசிரியர்கள் தங்கள் முழு பங்களிப்பை வழங்கி மாணவ, மாணவியர்களை சிறப்பாக வழிநடத்த வேண்டுமென தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம், தொகுதி 4-ல் (TNPSC Group 4) தேர்ச்சி பெற்ற 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.