பாடகி சின்மயி மூலமாக பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அவரிடம் மேலும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவி தனது குமுறல்களை முன்வைத்துள்ளார்.
‘Me too’ இயக்கம் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்சனைகளை வெளிகொணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார் பாடகி சின்மயி. அண்மையில் பிரபல மாடல் கிரிபாலி என்பவர் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களிடம் அவர்களது பிரச்சனைகளை வெளியிடும்படி பிரச்சாரத்தை துவங்கினார். இதில் மாணவிகள் பலர் தங்களது மோசமான அனுபவங்களை பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்த சின்மயி, அவருக்கு வந்திருந்த பல புகைப்படத்துடன் கூடிய குறுஞ்செய்திகளை பார்த்து அதிர்ச்சியுற்றிருந்தார்.
அதில் குறிப்பாக பத்ம சேஷாத்ரி பள்ளியில் பயின்ற மாணவிகள் பலர் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் ராஜகோபாலன் என்பவரால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர், ராஜகோபாலனின் லீலைகளை வெளிகொணர்ந்தார். அதன் பயனாக கடந்த இரு தினங்களாக பள்ளிகளில் ஆசிரியர் எனும் போர்வையில் சில காமக் கொடூரன்கள் செய்யும் அட்டூழியங்களை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றார்.
இதனைத்தொடர்ந்து மேலும் பல பள்ளிகளை சேர்ந்த மாணவிகள், தங்களது பள்ளிகளில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் தெரிவித்து வருகின்றனர், இந்தநிலையில் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர், அப்பள்ளி ஆசிரியர் ஒருவரால் தான் பாதிப்புக்குள்ளானதை பதிவிட்டுள்ளார். இந்த புகாரையும் பாடகி சின்மயி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதில் மாணவி தான் பிளஸ்2 படித்தபோது, மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பால் அமலன் என்ற ஆசிரியரால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த ஆசிரியர் மாணவர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார். வகுப்பறைக்குள் பெயர் சொல்லி அழைக்காமல் கெட்டவார்த்தைகளை பயன்படுத்தி மாணவிகளை அழைத்தாகவும், இதனை எதிர்த்த தன்னை வேண்டுமென்றே தண்டனை என்ற பெயரில் கொம்பு வச்சி அடித்ததாகவும் வேதனையை பதிவிட்டிருந்தார். மேலும் தனது தாயை பள்ளிக்கு வரவழைத்து, அவரை அவமானப்படுத்தி கண்ணீரோடு அனுப்பியதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். அதோடு நிற்காமல் கடைசி வரை செய்முறை மதிப்பெண் வழங்கமாட்டேன் என தன்னை மனதளவில் சித்ரவதை செய்ததாகவும் குமுறியிருந்தார்.
இந்த சம்பவமும் தற்போது வௌிச்சத்துக்கு வந்த நிலையில், இதுபோல் மேலும் பல பள்ளி மாணவிகளின் குமுறல் வெளிச்சத்துக்கு வரும் என தெரிகிறது.