குறைந்த மதிப்பெண் எடுத்தால் பள்ளியில் இடம் கிடையாது; அரசு பள்ளியே செய்யும் அட்டூழியம்!

குறைந்த மதிப்பெண் எடுத்தால் பள்ளியில் இடம் கிடையாது; அரசு பள்ளியே செய்யும் அட்டூழியம்!

திருப்பூர்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கையின் போது, சொற்ப காரணங்களை கூறி மாணவர்களை நிராகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்கள் நல்வழியில் செல்வதும், தனக்கான பாதையை கட்டமைப்பதும், தனக்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதும், வருங்காலத்தில் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் அவர்களது பள்ளிப்பருவத்தில் தான். 

ஆனால் மாணவர்கள் பாதை தவறுவதும், படிப்பை பாதியில் நிறுத்துவதும், நல்ல வருங்காலத்தை இழப்பதும் இதே பள்ளிப்பருவத்தில் தான். சில சமயங்களில், அம்மாணவர்கள் பயிலும் பள்ளியும்,  அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றனர். 

இதற்கு எடுத்துக்காட்டு சம்பவமாக, திருப்பூரில் ஒன்று நடந்துள்ளது. தமிழ்நாடங்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுருக்கிறது. 

பெற்றோர் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, 11ம் வகுப்பில் சேர்பதற்காக பள்ளிக்கு வந்துள்ளனர். அப்பொழுது, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர், மாணவர் தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதாவது, அந்தப்பள்ளியில், மாணவர்கள் சேர வேண்டும் என்றால், அவர்கள் வேறு பள்ளியில் படித்தவர்களாக இருக்கக்கூடாது மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க கூடாது என தணிக்கை செய்துள்ளார். 

அதில், நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்களே, அருகில் இருக்கும் ஐடிஐ கல்லூரியின் துண்டு பிரச்சாரத்தை வழங்கி, இந்த பள்ளியில் சேருவது இயலாத காரியம் எனவும், இந்த ஐடிஐ கல்லூரியில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார்கள்.

இதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் முறையிட்டனர். அதில் ஒரு மாணவன் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். அதாவது, தான் 6ம் வகுப்பில் இருந்து இங்கு தான் படித்து வருவதாகவும், பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றதால், இங்கு 11ம் வகுப்பில் சேர்வதற்கு மறுக்கப்படுகிறது என ஆதங்கத்துடன் தெரிவித்தார். இவர் கூறியதை, மறுக்கவும் முடியாமல், அதற்கு பதில் கூறவும் முடியாமல், அந்த ஆசிரியர் திணறிப்போய் நின்றனர்.

மாணவர்களை நன்றாக படிக்க வைப்பதே ஆசிரியர்களின் பணியாகுமே தவிர, அவர்களில் நன்றாக படிப்பவர் யார், அதிக மதிப்பெண்கள் எடுப்பவர் யார் என மாணவர்களை சலித்தெடுத்து பள்ளியில் சேர்த்துக்கொள்வது அவர்களது பணியல்ல, என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தனியார் பள்ளிகளே இதுபோன்ற அட்டூழியங்களை செய்து வருவது வழக்கம். தற்போது, ஏழை மாணவர்களின் ஏணிப்படியாக விளங்கக்கூடிய அரசு பள்ளிகளும் இக்காரியங்களில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் அரசு பள்ளி மாணவர்களின் வருங்காலத்தில், அரசு கவனம் செலுத்துகிறது என மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறக்க வாய்ப்புள்ளது.