உதகை வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

உதகை வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

உதகையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக உதகை அரசு ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ரோஜா மலர்கள் அழுகியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகை அரசு ரோஜா பூங்காவிற்கு சென்று பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களை கண்டு ரசித்தும் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து செல்வது வழக்கம்.

அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் சார்பில் 4500 ரகங்களில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஞாயிறு விடுமுறை தினமான இன்று உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை காணப்பட்டது. இதில் குறிப்பாக உதகை அரசு ரோஜா பூங்காவில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழையின் தாக்கம் இருந்ததால், தொடர் மழை காரணமாக உதகை ரோஜா பூங்காவில் பூத்திருந்த வண்ண ரோஜா மலர்கள் முற்றிலும் அழுகியதால் விடுமுறை தினமான இன்று பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனால் வரும் நாட்களில் ரோஜா பூங்காவை பூங்கா நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிக்க: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்!