"மாமன்னன் பார்த்தால்... அறிவுப்பசி தீரும்; சுயமரியாதை வரும்" அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை!

"மாமன்னன் பார்த்தால்... அறிவுப்பசி தீரும்; சுயமரியாதை வரும்" அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை!

மாமன்னன் பார்த்தால் பசி தீருமா?  என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு, "மாமன்னன் பார்த்தால் பசி தீராது. ஆனால், அறிவுப்பசி தீரும். சுயமரியாதை வரும்" என தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலளித்துள்ளார்.

ஈரோடு அடுத்த அரச்சலுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேற்று ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆட்சியின் முதலாமாண்டில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் முகாம்களில், 3,500 வீடுகள் கட்ட, 178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில், 400 வீடுகள் கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும், 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, "மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குறைத்து காட்டி உள்ளனர். அப்படம் பார்த்தால் பசி தீருமா" என பேசியது பற்றி செய்தியாளர்கள் அமைச்சர் மஸ்தானிடம் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், மாமன்னன் சமுதாயத்தை சீரமைக்கின்ற வகையில் எடுக்கப்பட்ட படம். ஆண்டான் அடிமை இருக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும், அரியாமையிலும் உள்ள மக்களையும் சம அந்தஸ்துக்கு உயர்த்தி, எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற கொள்கைக்காகவும், இளைஞர்கள் மத்தியில் அக்கருத்து பதிய வேண்டும் என்பதற்காகவும்தான் அந்தப்படத்தை எடுத்துள்ளனர் எனக் கூறினார்.

மேலும், நிச்சயமாக மாமன்னன் பார்த்தால் பசி தீராது. ஆனால், அறிவுப்பசி தீரும். சுயமரியாதை வரும். இதை பார்க்கும் இளைஞன் சிறந்த மனிதன் என தன்னை உருவாக்கி கொள்வான். தொட்டால் பாவம்; பேசினால் தீட்டு என்றதை மாற்றி, மனித சிந்தனை வரும் என குறிப்பிட்டார். தெடர்ந்து பேசிய அவர், அப்படத்தில் தாழ்த்தப்பட்டவரை அடித்து, சட்டையை கிழிக்கும் காட்சியும் உள்ளது. அது மற்றவரை கேவலப்படுத்துவதற்காக அல்ல. சமுதாயத்தில் அவ்வாறு நடக்கக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நடந்த தேர்தலில், முன்னாள் சபாநாயகர் தனபால் வேட்பாளராக போட்டியிட்டதை நினைவு கூர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் சபாநாயகர் தனபால் அவரது வீட்டில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்ததாகவும், அவர் வீட்டிற்கு சென்று விருத்தில் சாப்பிடாமல் வந்தவர் எடப்பாடி பழனிசாமி எனவும் கூறினார். மேலும் இப்படி செய்த எடப்பாடி பழனிச்சாமி  ‘மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்டவர்களை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்’ என கூறுவது சங்கடமாக உள்ளது, எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க