மூன்று வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை, சிக்கியது!!

மூன்று வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை, சிக்கியது!!

திருப்பதியில், கோவில் தரிசனத்திற்காக பாதை யாத்திரையாக சென்ற பொழுது, 3 வயது சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை, வனத்துறையினரிடம் சிக்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் அலிபிரி மலைப்பாதையில் நடந்து செல்வதுண்டு. அந்த வகையில் கடந்த 22-ம் தேதியன்று ஒரு குடும்பத்தினர் அலிபிரி பகுதியில் நடைபயணம் மேற்கொண்டனர். தந்தை தாய் முன்னால் நடந்து சென்றிருக்க, 3 வயது சிறுவனான கவுசிக் அவரது தாத்தாவோடு அனுமன் சிலை அருகே உள்ள கடையில் தின்பண்டங்கள் வாங்க நின்றார். 

அப்போது அந்த காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தையொன்று பதுங்கியவாறே வந்து சிறுவன் கவுசிக் மீது பாய்ந்தது. ஒரே அடியாக கழுத்தைப் பிடித்த சிறுத்தை, சிறுவனை கவ்விக் கொண்டு சேஷாசலம் வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. 

இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து, 120 அடி தூரம் வரை சென்ற சிறுத்தை பதறிய நிலையில் சிறுவனை அங்கேயே விட்டு விட்டு காட்டுக்குள் தப்பியது.  நொடி நேரத்தில் சிறுத்தையிடம் இருந்து தப்பிய சிறுவன், கதறியபடியே கிடந்து துடித்தான். 

சிறுத்தையின் கோரப் பற்கள் ஆழமாய் பதிந்ததில், தலையில் ரத்தம் வழிந்ததையடுத்து அங்கிருந்தவர்களின் உதவியால் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மேற்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட திருப்பதி கோயில் நிர்வாகம் பொதுமக்கள் தனியாக செல்ல வேண்டாம் 200 பேர் கொண்ட குழுக்களாக செல்ல வேண்டும் என்றும், இரவு 10 மணிக்கு மேல் யாத்திரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது. 

பின்னர் சேஷாசலம் வனத்துறை அதிகாரிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தப்பியோடிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காடு முழுக்க 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டம் தெரியவந்தது. 

இதையடுத்து ஆட்டிறைச்சி மூலம் பொறி வைத்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் சிக்க வைத்தனர். தங்களை பரபரப்புக்குள்ளாக்கிய சிறுத்தை சிக்கியதை கேள்விப்பட்ட மக்கள், நிம்மதிப் பெருமூச்சு அடைந்தனர். 

இதையடுத்து பிடிபட்ட சிறுத்தை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அடர்ந்த வனத்துறைப் பகுதியில் கொண்டு விடப்பட்டது. 

3 வயது சிறுவனை கடித்து கவ்விய சிறுத்தையால் அச்சமடைந்த மக்கள், கோவிந்தா கோவிந்தா என கோஷம் போட்டதும், அதுவே சிறுத்தை கூண்டில் அடைபட்ட பின்னர் எல்லாம் ஏழுமலையான் புண்ணியம் என கூறியதும் அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளுக்கு தக்லைஃபாய் அமைந்தது.

இதையும் படிக்க || நகையை மாற்றிய பெண், கடையை மாற்றாததால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்!