53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; 2 மகள்களுடன் தேர்வெழுதிய ஷீலா யார்?

திரிபுரா மாநிலத்தில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை 53 வயது பெண் எழுதி வெற்றிப் பெற்றுள்ளார்; மகிழ்ச்சியாக இருப்பதாகக் பெருமிதம்.

53 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி; 2 மகள்களுடன் தேர்வெழுதிய ஷீலா யார்?

கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு என சொல்வார்கள். அதற்கு வாழும் உதாரணமாக திரிபுராவில் ஷீலா ராணி தாஸ் என்ற 53 வயதான ஒரு பெண் இருக்கிறார்.

திரிபுராவின் அகார்டலா பகுதியைச் சேர்ந்த ஷீலா ராணி தாஸுக்கு  இரண்டு மகள்கள் ராஜஸ்ரீ தாஸ் மற்றும் ஜெயஸ்ரீ தாஸ் உள்ள நிலையில், அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றுள்ளார். மேலும், அவரது மகள்கள் இருவரும் 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளதை கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து அவர் பேசியபோது, “1994ம் ஆண்டில் முதன் முறையாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் நான் தோல்வியடைந்தேன். அதற்குப் பிறகு என்னால் தேர்வெழுத முடியவில்லை. என் கணவர் இறந்துவிட்டார். இந்த நிலையில், இந்த வருடம் தான், என் குழந்தைகளுடன் தேர்வுக்குப் படிக்க முடிந்தது. இது தான் இரண்டாவது முறையாக நான் தேர்வெழுதுவது. எனக்கு ஊக்கமளித்தது என் மகள்களும் எனது ஆசிரியரும் தான்.” என்று கூறினார்.

தேர்வில் வெற்றிப் பெறுவது தனக்கு முக்கியம் இல்லை என்றும், தேர்வு எழுதுவது மட்டுமே முக்கியமானதாகக் கருதியதாகவும் அவர் தெரிவித்த நிலையில், தற்போது தான் பத்தாம் வகுப்புப் பொது தேர்வில் தேர்ச்சியடைந்தவராக இருக்க, அவரது மகள்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பதைக் கூறி பெருமிதம் அடைகிறார் ஷீலா.

கிடைத்த தகவல்களின் படி, ஷீலா ராணி தாஸ் 221 மதிப்பெண்களும் அவரது மகள்கள் 250 மற்றும் 328 மதிப்பெண்கள் பெற்றதாகத் தெரிகிறது. மேலும், வயது பற்றி கவலைப் படாமல் தனது 53 வயதிலும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைய வேண்டுமென்ற முனைப்பில் இருந்த ஷீலாவிற்கும், அவருக்கு ஊக்கமளித்த அவரது மகள்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.